ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பதவியேற்ற பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அப்போது, “கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், விஐபி பிரேக்தரிசன டிக்கெட்டுகள், ஒப்பந்தபணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் வந்தன.
இதன் பேரில் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள பல்வேறு துறைகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
நன்றாக இருந்த திருப்பதி கோவிந்தராஜர் கோயில் சந்திரங்களை இடித்துவிட்டு, புதிதாக ஸ்ரீபதம், அச்சுதம் என இரு விடுதிகள் கட்ட அனுமதி வழங்கி உள்ளனர். இதுகுறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஆய்வு செய்துஅரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அமைச்சராக இருந்த ரோஜா, பெத்தி ரெட்டி மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் மீதான முறைகேடு குறித்தும் விசாரிக்கின்றனர்.