21-60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் முதல் அமல்

0
53

21 முதல் 60 வயதுகுட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சர் பொறுப்பை வகிப்பவருமான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல்செய்தார். அப்போது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு இலவச திட்டங்களை அவர் அறிவித்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது: `முதல்வரின் என் அன்புத் தங்கை’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். இவை அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வரும். இந்த பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.

பருத்தி, சோயாபீன்ஸ் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5,000 (ஹெக்டேருக்கு) வழங்கப்படும். மேலும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு போனஸாக ரூ.5 வழங்கப்படும்.

வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.