எனக்கு அறிவுரை கூற வேண்டாம்: காங். எம்.பி தீபேந்தர் ஹூடாவுக்கு சபாநாயகர் கண்டிப்பு

0
52

‘ஜெய் சம்பவிதான்’ என கோஷமிட்டது பற்றி சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் ஹூடாவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் கண்டனம் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி.க்களில் சசிதரூர் எம்.பி.யாக பதவியேற்றார். உறுதிமொழியை வாசித்து முடித்ததும் அவர் ஜெய் ஹிந்த், ஜெய்சம்விதான் (அரசியல் சாசனம் வாழ்க) என கோஷமிட்டார்.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிஎம்.பி.க்களில் சிலர் அவையில் ‘ஜெய் சம்விதான்’ என கோஷமிட்டனர். சசிதரூர் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கை கொடுத்துவிட்டு திரும்பியபோது கோஷமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை பார்த்து ‘‘அவர் ஏற்கனவே அரசியல் சாசனம் மீது உறுதிமொழி எடுத்துவிட்டார்’’ என்றார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹூடா இருக்கையை விட்டு எழுந்து ‘ஜெய் சம்விதான்’ என கோஷமிடுவதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றார்.

இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் அறிவுரை கூற வேண்டாம். இருக்கையில் அமருங்கள்’’ என்றார். இந்த வீடியோவை நேற்று முன்தினம் மாலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தீபேந்தர் ஹூடா, ‘‘நாடாளுமன்றத்தில் ஜெய்சம்விதான்’ என கூறுவது தவறா? இது குறித்து மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தகாத கோஷங்கள் எழுப்பும்போது, தடுத்து நிறுத்தப்படுவது இல்லை. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்‘ஜெய் சம்விதான்’ என கோஷமிட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. வாழ்வுக்கும், வாழ்வா தாரத்துக்கும் பாதுகாப்பு அளிக் கும் அரசியல்சாசனம் மீது உறுப்பினர்கள் உறுதி மொழி எடுக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவது போன்றது.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.