கட்டுமான பணியின் போது தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு

0
132

திருவட்டாறு அடுத்த வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் பால்சன் (56)கொத்தனார். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.   மகள்களுக்கு   திருமணம் ஆகி விட்டது.

இந்த நிலையில் பால்சன் நேற்று ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்து வரும் கட்டிட கட்டுமான பணிக்காக சென்றார். அங்கு சாரம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாடியில் அமைக்கப்பட்ட சாரத்தில் நின்று  பால்சன் பணிபுரிந்த போது திடீரென நிலை தடுமாறு கீழே விழுந்தார்.

 இதில் பால்சனின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பால்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுகந்தி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.