குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தொடர்பாக செயல்பட்டு வரும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு, மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. எனவே புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்டு, சமூக அக்கறை கொண்ட விருப்பமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் நபர் குற்ற பின்னணி மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர்கள் எந்த குழுவில் சேர விருப்பப்படுகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு தங்களது புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.