முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு

0
62

கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மருதமலையில் கடந்த மாதம் 31-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் ஐந்து நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு தாய் யானை வனப்பகுதிக்குள் கூட்டங்களுக்குள் விடப்பட்டது.

பின்னர் அந்த தாய் யானையுடன் சுற்றி வந்த குட்டி ஆண் யானையும் வனத்துறையினர் பராமரித்து வந்த நிலையில் அந்தக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தில் உள்ள யானைகள் குட்டியை சேர்க்காத நிலையில் குட்டி யானை மலை கிராமப் பகுதியில் சுற்றி திரிந்தது.

இந்நிலையில் பிறந்து நான்கு மாதமே ஆன குட்டி யானைக்கு தாய்ப்பால் பிரச்சினை மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பிரச்சினை உள்ள நிலையில் அதனை முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

கடந்த 9-ம் தேதி கோவையிலிருந்து குட்டி யானை முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.

முதுமலைக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானைக்கு பூஜை செய்த பிறகு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் முன்பாக மற்ற இரண்டு குட்டி யானைகள் உள்ள அறைக்கு அருகில் உள்ள கரால் கூண்டில் உள்ள அறையில் விடப்பட்டது.

இரண்டு மாதத்துக்கு முன்பு சத்தியமங்கலத்தில் தாயைப் பிரிந்த ஒரு குட்டி யானை மற்றும் கோவை மாவட்டம்பெரியநாயக்கன்பாளையத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானைகள், முதுமலையில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் புது குட்டியான வரவால் தாயிடமிருந்த பிரிந்து பராமரிக்கப்பட்டு வரும் குட்டி யானைகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இந்த குட்டியை பராமரிக்க இரண்டு பேர் நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கால்நடை மருத்துவர் தினந்தோறும் அதன் உடல் தகுதியை ஆய்வு செய்து அந்த யானைக்கு தாய்ப்பாலுக்கு நிகரான லாக்டோஜென், ஊட்டச்சத்து உணவுகள், ஊட்டச்சத்து மருந்துகள், தேவைக்கேற்ப குளுக்கோஸ் நடைப்பயிற்சிகள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், அந்த ஆண் குட்டி யானை உடல் நல குறைவு ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.