பந்தலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. உதகை குன்னூர் கோத்தகிரி குந்தா பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூரில் அதிக கன மழை பெய்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி கடலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பந்தலுாரில் அத்திக்குன்னா வழியாக கூடலுார் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த வழியாக, உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் நிஷா, அவரது மகன் ஜோஸ், நண்பர் ஆல்வின் ஆகியோர் காரில் வந்த போது, மண் சரிவில் கார் தேயிலை தோட்டத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் காயங்களுடன் தப்பினர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.
மழை தொடர்ந்து வருவதால் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாகளுக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை நிலவரம்:
கூடலூர் 48, தேவாலா 192, சேரங்கோடு 83, அவிலாஞ்சி 42, பாடந்துறை 108, ஓவேலி 39, அப்பர் பவானி 42, செருமுள்ளி 103 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.