சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் பாஜக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் கூறியதாவது:
நீட் தேர்வு வேண்டாம் என்றுமுதல்வர் இன்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ரூ.1 கோடி, முதுகலை படிப்புக்கு ரூ.5 கோடி வரை செலவாகிறது. ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது திருப்பி அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையாக தற்போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நடக்காத விஷயத்துக்கு திரும்பத் திரும்ப தீர்மானம் போடுகிறார்கள்.
நீட் பிரச்சினையை அரசியலாக்க பார்க்கிறார்கள். நீட் தேர்வில் சில முறைகேடுகள் நடந்துள்ளன. அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மணல்கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. ரூ.4,700 கோடி அளவில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. மணல் கொள்ளை தொடர்பாக அமலாக்கத் துறை நடத்தி வரும் விசாரணை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.