வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீராயி மக்கள்’. எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள நாகராஜ் கருப்பையா கூறும்போது, “இது கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, சந்தோஷத்தை மண் மனத்தோடும் சொல்லும் படம். சொந்த ஊர், சொந்த மண், சொந்தங்கள் என்பது தனி சுகத்தை, விவரிக்க முடியாத உணர்வைத் தருவது. அதில் ஆயிரம் முரண்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அரவணைத்து கொள்வதுதான் அழகு என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.கண்டிப்பாக இந்த கதை ஒவ்வொருவருக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கும். புதுக்கோட்டை, அறந்தாங்கி பின்னணியில் இதன் கதை நடக்கிறது. அந்தப் பகுதி வட்டார வழக்கையும் படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். இதில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆக.9-ம் தேதி படம் வெளியாகிறது” என்றார்.