அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகி உள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார்.அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதன்படி வரும் நவம்பர் 5-ம் தேதி அந்த நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். ஆனால் 81 வயதாகும் அவர், வயதுமூப்பு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) களமிறங்கி உள்ளார். அண்மையில் இருவருக்கும் இடையே நடந்த பொது விவாதத்தில் ஞாபக மறதியால் பைடன் தடுமாறினார். எனவே அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாக வலியுறுத்தினர்.
இந்த சூழலில் அதிபர் பைடன்நேற்று முன்தினம் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். தற்போதைய அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட முழு ஆதரவு அளிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அதிபர்ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக நிதி திரட்டி வந்தார். ஆனால் நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கவில்லை. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலகிய நிலையில், கமலா ஹாரிஸ் தேர்தல் நிதி திரட்டும் பணியைத் தொடங்கினார். முதல் 7 மணி நேரத்தில் மட்டும் கமலாவுக்கு ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது. மிக குறுகிய நேரத்தில், மிக அதிக அளவில் நன்கொடை குவிந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை.
அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், கமலா ஹாரிஸுக்கு பக்கபலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரதுமனைவி ஹிலாரி கிளிண்டன் உள்பட ஏராளமான தலைவர்கள் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களாக களமிறங்க திட்டமிட்டிருந்த கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம், அமெரிக்க போக்குவரத்துத் துறைஅமைச்சர் பீட் புட்டிகீக் ஆகியோரும் கமலாவை பகிரங்கமாக ஆதரித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 19 முதல் 22-ம் தேதி வரை ஜனநாயக கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் அதிபர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். இப்போதைய நிலையில் கமலா ஹாரிஸ் முன்வரிசையில் உள்ளார்.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் கொண்டாட்டம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். அவரது தாய் ஷியாமளா கோபாலன். கமலாவின் தாத்தா கோபாலன், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்.
அந்த கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் கூறும்போது, “எங்கள் ஊரை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றபோது துளசேந்திரபுரம் விழாக்கோலம் பூண்டது. அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்றால் மிகப்பெரிய விழாவாக கொண்டாடுவோம். இப்போதே கிராமத்தில் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது’’ என்றார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஷியாமளா கோபாலன் கடந்த 1960-ம் ஆண்டில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்டு ஹாரிஸை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு கடந்த 1964 அக்டோபர் 20-ம் தேதி கமலா தேவி ஹாரிஸ் பிறந்தார்.
சட்டம் பயின்ற கமலா, ஜனநாயக கட்சியின் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகிக்கிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு டக்ளஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. டக்ளஸ் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். முதல் திருமணம் மூலம் டக்ளஸுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களை கமலா ஹாரிஸ் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.