பல ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டிக்கு வந்து தங்கி ஓய்வெடுத்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு வந்தார். மைசூரில் இருந்து வாடகை காரில் தனியாக வந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் தங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் ரஜினியை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ரசிகர்கள் ஆர்வம்: ரஜினி தங்கி இருப்பதை அறிந்த ரசிகர்கள், நேற்று காலை நட்சத்திர ஓட்டலின் முன் கூடி அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என விடுதி மேலாளர்களிடம் வலியுறுத்தினர். அப்போது ரஜினி, காரில் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவரது காரின் குறுக்கே நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர். ரஜினி கார் கண்ணாடியை மட்டும் இறக்கி கையை அசைத்தபடி, மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மன்னன், எஜமான் போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்புக்குப் பிறகு தற்போதுதான் ரஜினி ஊட்டி வந்துள்ளதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஓய்வுக்காக ரஜினி ஊட்டிக்கு வந்தாரா? அல்லது வேறு ஏதாவது அரசியல் காரணங்களா? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.















