அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சகநாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக லாஸ்லோ விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கஓபன் டென்னிஸ் தொடர்களில் ஜோகோவிச்சின் 90-வது வெற்றியாக இது அமைந்தது.4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லேவையும், 6-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 4-6, 5-7, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக்கையும், 8-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு 6-4, 6-2, 2-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மோன்பில்ஸையும் வீழ்த்தினர்.
9-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-1, 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவையும், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர்பிரிட்ஸ் 6-3, 7-6 (7-1), 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியையும், 13-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகுட்டையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காஃப்6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் தட்ஜானா மரியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியையும், 7-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் கின்வென் 6-7 (3-7), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் எரிகா ஆண்ட்ரீவாவையும், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோ 6-1, 6-1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் அரன்ட்ஸா ரஸ்ஸையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.
12-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கஸட்கினா 1-6, 6-7(3-7) என்ற செட் கணக்கில் 47-ம்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெய்டன் ஸ்டேர்ன்ஸிடம் தோல்வி அடைந்தார். மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், பெலாரஸின் விக்டோரியா அசரங்கா, உக்ரைனின் மார்த்தாகோட்ஸ்யுக், எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றில் கால்பதித்தனர்.
இந்திய ஜோடிகள் முன்னேற்றம்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அர்ஜெண்டினாவின் கைடோ ஆண்ட்ரியோசி ஜோடி தங்களது முதல் சுற்றில் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல், மெக்ஸிகோவின் மிகுவல் ரெய்ஸ் வரேலா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஸ்ரீராம் பாலாஜி, கைடோ ஆண்ட்ரியோசி ஜோடி 5-7, 6-1, 7-6 (12-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்தியாவின் யுகி பாம்ப்ரி, பிரான்ஸின் அல்பானோ ஆலிவெட்டி ஜோடி 6-3 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ரியான் செகர்மேன், பாட்ரிக் ட்ராக் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தது.