கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. கதாநாயகனாக ஆதவன் அறிமுகமாகிறார். ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, உமர் ஃபரூக் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலசுப்பிரமணியன் இசையமைக்கிறார்.படம் பற்றி நாயகன் ஆதவன் கூறும்போது, “மலைக் கிராமத்தில் வசிக்கும், எந்தப் பிரச்சினைக்கும் போகாத இளைஞனாக இதில் நடித்துள்ளேன். அவனால் கிராமத்துக்கு ஒரு பிரச்சினை வந்த போது சமாளிக்க முடிந்ததா? என்று கதை போகும். படத்தில் சினிமா நடிகர்கள் என 6 பேர் மட்டும் தான்.
மற்றபடி அந்தப் பகுதி மக்கள் நடித்துள்ளனர். தங்குவதற்கு இங்கு எந்த வீடும் கிடைக்காததால் டென்ட் அடித்துத் தங்கினோம். இது வித்தியாசமான அனுபவம். படத்துக்காகக் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் எனது தலை முடியையும் தாடியையும் வெட்டாமல் வளர்த்தேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.