மூவர் கூட்டணியால் இந்திய அணிக்கு வசமான டி20 உலகக் கோப்பை

0
149

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மூவர் கூட்டணியின் அற்புதமான செயல்பாட்டால் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வசமாகியுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

இதற்கு முன்பு 2007-ல் டி20 உலகக் கோப்பையை வென்றிருந்த இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையை 2 முறை வென்ற நாடுகள் பட்டியலிலும் இந்திய அணி இணைந்துள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து (2010, 2022), மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் (2012, 2016) தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன.

இந்த முறை இந்திய அணி கோப் பையை வென்று தனது 17 வருட கோப்பை தாகத்தைத் தீர்த்துக் கொண்டது.இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளனர். ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணியின் சிறப்பான செயல்பாடுகள் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.

இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டி யா 3 விக்கெட்களையும், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தான் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ரீஸா ஹென்ரிக்ஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார் பும்ரா. அவர் வீசிய அற்புதமான பந்துவீச்சில் கிளீன் போல்டானார் ஹென்ரிக்ஸ். அதைப் போலவே கடைசி ஓவர்களில் அற்புதமாக ஆடக்கூடிய மார்க்கோ யான்சனின் விக்கெட்டை 18-வது ஓவரில் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரிந்தார் பும்ரா. 18-வது ஓவரில் அவர் வீசிய இன்ஸ்விங்கர் பந்து, மார்கோ யான்சனை ஏமாற்றி ஸ்டம்புகளை சிதறடித்தது. 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார் பும்ரா.

மேலும் இந்தத் தொடரில் 15 விக்கெட்களைக் கைப்பற்றி தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார். உலகக் கோப்பை தொடர்களில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கே தொடர்நாயகன் விருது கிடைக்கும். ஆனால் இம்முறை தனது துல்லிய தாக்குதல் பந்துவீச்சு மூலம் எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்து தொடர்நாயகன் விருதைத் தட்டி வந்துள்ளார் பும்ரா.

அதைப் போலவே மற்றொரு தொடக்க பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கியமான விக்கெட்களை சிதறடித்தார். இந்தத் தொடரில் 17 விக்கெட்களைக் கைப்பற்றி இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி இருக்கிறார் அர்ஷ்தீப் சிங். தனது இடது கை பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளார் அவர்.

3-வதாக அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியா அணியின் வெற்றிக்கு மிகவும் துணைபுரிந்தார். 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய ஹர்திக் பாண்டியா 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அரை சதம் விளாசி, இந்திய அணியின் கோப்பைக் கனவை தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்த ஹெய்ன்ரிச் கிளாசனை அவுட்டாக்கினார் ஹர்திக் பாண்டியா. கிளாசன் ஆட்டமிழந்த பிறகுதான் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பும் அதிகரித்தது. ஹெய்ன்ரிச் கிளாசன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தியது மிகப்பெரிய திருப்புமுனையாகவும், இந்திய அணிக்கு வெற்றி முனையாகவும் அமைந்தது. இக்கட்டான நேரத்தில் கிளாசனை வெளியேற்றி மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்ல உதவினார் ஹர்திக் பாண்டியா. அதைப் போலவே தான் வீசிய கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

ஆனால் மனம்தளராமல் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். மேலும், தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் மில்லரை முதல் பந்திலேயே வெளியேற்றினார். ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை, டேவிட் மில்லர் தூக்கியடிக்க அதை எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து மிகவும் அற்புதமான வகையில் கேட்ச் செய்தார் சூர்யகுமார் யாதவ்.

இதே ஓவரின் 5-வது பந்தில் காகிசோ ரபாடாவையும் அவர் வெளியேற்றினார். எனவே, இந்திய அணியின் வெற்றியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடங்கிய மூவர் கூட்டணியின் பங்கு அதிகம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

விராட் கோலி: அதுமட்டுமல்லாமல் விராட் கோலி குவித்த 76 ரன்களும், சூர்யகுமார் யாதவின் அற்புதமான பவுண்டரி லைன் கேட்சும் இந்திய அணி கோப்பை யை வெல்ல வழிவகை செய்தன என்பதே உண்மை.

அதிக வெற்றி: சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்தவர்கள் வரிசையில் கேப்டன் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். அவர் கேப்டனாக செயல்பட்டு இதுவரை 50 வெற்றிகளைக் குவித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் பாபர் அசாம் (48 வெற்றி), உகாண்டாவின் பிரையன் மசாபா (45 வெற்றிகள்), இங்கிலாந்தின் இயன் மார்கன் (44 வெற்றிகள்) ஆகியோர் உள்ளனர்.

அதிக விருது: சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்றவர்கள் வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் 16 ஆட்டநாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். அதற்கடுத்த இடங்களில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (15 விருது), ரோஹித் சர்மா (14 விருது), சிகந்தர் ராசா (14 விருது), முகமது நபி (14 விருது), விரன்தீப் சிங் (14 விருது) ஆகியோர் உள்ளனர்.

தொடர்நாயகன்: டி20 உலகக் கோப்பை தொடர்களில் தொடர்நாயகன் விருதுகள் பெற்றவர்கள் வரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா சேர்ந்துள்ளார். இதற்கு முன்பு இந்த விருதுகளை பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி, இலங்கையின் திலகரத்னே தில்ஷன், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், விராட் கோலி (2 முறை), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், இங்கிலாந்தின் சேம் கரண் ஆகியோர் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here