சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பந்து வீச்சுதான் எங்களைக் காப்பாற்றியது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்தார்.
குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. நித்திஷ் ராணா 36 பந்துகளில் 81, கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்தனர்.
பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 63, ரவீந்திர ஜடேஜா 32, தோனி 16 ரன்கள் எடுத்தனர். 81 ரன்கள் குவித்த ராணா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரியான் பராக் கூறியதாவது: கடந்த 2 லீக் போட்டிகளில்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றாலும், அது மிகவும் நீண்ட காலம் போல எனக்குத் தோன்றுகிறது. நாங்கள் இந்தப் போட்டியில் 20 ரன்கள் குறைவாக எடுத்ததாகவே நான் நினைக்கிறேன்.
நாங்கள் நடு ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் விளையாடினோம். ஆனால், சில விக்கெட்களை அப்போது இழந்தோம். அதன் பின் நாங்கள் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டோம். பந்துவீச்சாளர்கள் ஒன்றாக இணைந்து எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தினர். பந்துவீச்சுதான் எங்களைக் காப்பாற்றியது. இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து கேப்டன் ருதுராஜ் கூறியதாவது: ராஜஸ்தான் வீரர் நித்திஷ் ராணா அபாரமாக விளையாடினார். அவரை வீழ்த்துவதற்குத் தேவையான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டபோதும் அது பலன் அளிக்கவில்லை. ஃபீல்டிங்கிலும் நாங்கள் கோட்டை விட்டோம். அடுத்து வரும் ஆட்டங்களில் ஃபீல்டிங்கை மேம்படுத்துவோம். 183 ரன்கள் என்பது சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான். நெருங்கி வந்து தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.