ராமேசுவரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்துக்கு இதுவரை 2 கோடி பார்வையாளர்களுக்கு மேல் வந்து சென்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக் காலத்துக்கு பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்தபோதே உயிரிழந்தார். பின்னர் அவரது உடல், சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது நினைவாக மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் ‘அப்துல்கலாம் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.
கலாம் நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் இங்குள்ள நான்கு காட்சிக் கூடங்களில் கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், அவரது கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய கரோனா பரவலைத் தொடர்ந்து அரசு பொது முடக்க காலத்தில் கலாமின் தேசிய நினைவகம் 2020 மார்ச் 17 அன்று மூடப்பட்டு 525 நாட்களுக்குப் பிறகு 2021 ஆக.24 அன்று மக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஜுன் 7 அன்று அப்துல்கலாம் தேசிய நினைவகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு 3,237 நாட்கள் ஆன நிலையில் ஞாயிற்றுக்கிழமையுடன் 2 கோடி பார்வையாளர்கள் கலாம் நினைவகத்தைப் பார்வையிட்டுள்ளனர். இந்நிகழ்வை இனிப்பு வழங்கி டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கலாமின் பேரன் ஷேக் சலிம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்தபோது வந்த மக்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.















