பயணிகளின் வசதிக்காக அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 ஏசி அல்லாத பெட்டிகளை தயாரிக்க ரயில்வே திட்டம்

0
60

பயணிகளின் வசதிக்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 ஏசி இல்லாத ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரயில்வேயில் தினசரி 13,000-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.50 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அண்மையில், விரைவு ரயில்களின்பொதுபெட்டிகளில் இடம் இல்லாதவர்கள், முன்பதிவு பெட்டிகளில் நின்றுசெல்லும் நிலை ஏற்பட்டது. இதனால்,முன்பதிவு டிக்கெட் எடுத்து பயணித்தவர்கள் சிரமத்தை சந்தித்தனர். இது பெரிய விவாதத்துக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து, சாதாரண பயணிகளுக்கான ஏசி இல்லாத ரயில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சாதாரண பயணிகளின் வசதிக்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 ஏசி இல்லாத ரயில் பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள்கூறியதாவது: பயணிகளின் வசதிக்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏசி அல்லாத 10,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 5,300 பொது பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன.

2024-25-ம் ஆண்டில் 2,605 அம்ரித் பாரத் பொதுபெட்டிகளும், 1,470 ஏசி இல்லாத அம்ரித் பாரத் தூங்கும் வசதி பெட்டிகளும், 323 எஸ்எல்ஆர் பெட்டிகளும், 32 உயர் அளவு பார்சல்பெட்டிகளும் 55 பேன்டிரி கார் பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன.

2025-26-ம் ஆண்டில் 2,710 அம்ரித் பாரத் பொது பெட்டிகளும், 1,910 ஏசி அல்லாத அம்ரித் பாரத் தூங்கும் வசதி பெட்டிகளும், 514 எஸ்எல்ஆர் பெட்டிகளும், 200 உயர் அளவு பார்சல் பெட்டிகளும், 110 பேன்ட்ரி கார்பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன.ரயில் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.