‘உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் செல்வாக்கு சமீபத்தில் அதிகரித்தது, இங்குள்ள குற்றவாளிகளின் பலத்தை அதிகரித்துள்ளது’’ என மாநிலங்களவை பாஜக எம்.பி சுதன்ஷு திரிவேதி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதன்ஷு திரிவேதி அளித்த பேட்டியில் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை மற்றும்பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் சிக்கிய 2 பேர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றவாளிகளை சமாஜ்வாதி கட்சி பாதுகாக்கிறது. தேர்தல் நேரத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பற்றி பேசியவர்கள், அவர்களது கட்சியினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதை பார்க்கின்றனர். ராகுல் மற்றும் அகிலேஷின் பலம் உ.பி.யில் சற்று உயர்ந்தது, குற்றவாளிகளுக்கு தைரியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.சமாஜ்வாதி கட்சி குற்றவாளிகளை பாதுகாப்பது மட்டும் அல்லாமல், இண்டியா கூட்டணி கட்சியினர் குற்றவாளிகளை பாதுகாப்பதில் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பது சமாஜ்வாதி கட்சியின் மரபணுவில் உள்ளது.மேற்குவங்கத்தில் பெண் டாக்டர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், உள்ளூர் போலீஸாரால் தீர்வு ஏற்படாவிட்டால், அந்த வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறார். இந்தவழக்கை பிசுபிசுக்கச் செய்யும் நோக்கத்துடன் தாமதம் செய்யப்படுகிறது. இதை உடனடியாக சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும். இந்தவிவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோர் மவுனம் காப்பது ஏன்?இண்டியா கூட்டணி கட்சியினர் தங்கள் கட்சிக்குள் உள்ள குற்றவாளிகளை பரஸ்பரம் பாதுகாக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.