கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் மட்டும் இதுவரை சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான 580 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கைப்பேசியைத் தவறவிட்டால் பதற்றமடையாமல், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் மனு அளிக்கலாம் அல்லது இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இந்த இணையதளத்தில் காணாமல் போன கைப்பேசியின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை பதிவு செய்து பிளாக் செய்தால், தவறவிட்ட கைப்பேசி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், தவறவிட்ட கைப்பேசியையும் மீட்கலாம்.
கைப்பேசி திருட்டு தொடர்பாக இதுவரை 36 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதில் 15 பேரை கைது செய்துள்ளோம் என்றார் அவர்.















