ரஷ்யா-உக்ரைன் இடையே நிரந்தர அமைதி ஏற்பட இந்தியா ஆதரவாக இருக்கும் என போலந்தில் பிரதமர் மோடி கூறினார். போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். 45 ஆண்டு இடைவெளிக்குப் பிறகுபோலந்து வந்த இந்திய பிரதமருக்கு தலைநகர் வார்சாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி பேசியதாவது:
உலகின் மற்ற நாடுகளில் இருந்து விலகியிருக்கும் கொள்கையை இந்தியா பல ஆண்டுகளாக பின்பற்றி வந்தது. ஆனால்,தற்போது எல்லா நாடுகளுடனும் நெருக்கமாக இருக்கும் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இந்த பிராந்தியத்தில் நிரந்த அமைதி ஏற்பட வேண்டும் எனஇந்தியா விரும்புகிறது. இதுபோருக்கான காலம் அல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு. மனிதஇனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாக இணையும் நேரம் இது. அதனால்தான் இந்தியா பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைத்துள்ளது. உக்ரைன் செல்லும் நான், தற்போது நடைபெற்று வரும்போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண அந்நாட்டுஅதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்துவேன்.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கடந்த 2022-ல் உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் போலந்து வழியாக இந்தியா திரும்ப ஆபரேஷன்கங்கா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் இங்குள்ள இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.தலைநகர் வார்சாவில் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள செய்தியில், “இந்த சந்திப்பு இந்தியா-போலந்து உறவில் புதிய மைல்கல். பிரதமர் மோடியை, போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், உற்சாகமாக வரவேற்றார்” என குறிப்பிட்டுள்ளார்.
போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் போலந்து சென்றார். அவர் போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரேடோஸ்லா சிகோர்ஸ்கியை நேற்று சந்தித்து உக்ரைன் போர், இந்தோ-பசிபிக் நிலவரம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை உட்பட பல விஷயங்கள் குறித்து பேசினார். இந்த சந்திப்பு மிகவும் நன்றாக இருந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார். தலைநகர் கீவ்-ல் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.