ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியூரோ லிங்க், தி போரிங் கம்பெனி, எக்ஸ் ஏஐ, எக்ஸ் வலைதளம் உள்ளிட்ட பல நிறுவனங்களை உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்க் நடத்தி வருகிறார்.
அவரது சொத்து மதிப்பு ரூ.95 லட்சம் கோடியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தும் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள போகா சிகா பகுதியில் உள்ள 400 சதுர அடி வீட்டில் வசிக்கிறார். அந்த வீட்டில் ஒரு வரவேற்பறை, சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை மட்டுமே உள்ளது.
பெரும்பாலான நாட்கள் எலான் மஸ்க் தனது தொழிற்சாலைகளின் வளாகங்களிலேயே தூங்குகிறார். கனடா எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலே ஆகியோரை எலான் மஸ்க் அடுத்தடுத்து திருமணம் செய்தார். இருவரையும் விவாகரத்து செய்த பிறகு அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.
தற்போது நியூரோலிங்க் தலைமை செயல் அதிகாரி ஷிவோன் உடன் மஸ்க் வாழ்ந்து வருகிறார். எலான் மஸ்குக்கு மொத்தம் 14 பிள்ளைகள் உள்ளனர். முன்னாள் மனைவிகள், பிள்ளைகளுக்கு ஆடம்பர பங்களாக்களை மஸ்க் கட்டிக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மட்டும் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.















