நர்கிஸ், பல்ராஜ் சாஹ்னி நடித்து 1958-ல் வெளியான இந்தி திரைப்படம், ‘லாஜ்வந்தி’. நரேந்திர சூரி இயக்கியிருந்தார். 1959-ம் ஆண்டில் கேன்ஸ் பட விழாவின் தங்கப்பனை விருதுக்குப் போட்டியிட்ட இந்தப் படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட படம், ‘எங்கள் செல்வி’. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்துக்கு முரசொலி மாறன் திரைக்கதை, வசனம் எழுதினார்.
அக்கினேனி நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஜோடியாக நடித்தனர். டி.எஸ்.பாலையா, பாலாஜி, வி.ஆர்.ராஜகோபால், சி.கே.சரஸ்வதி, கே.ஆர்.செல்லம், மல்யுத்த வீரரும் இந்திநடிகருமான தாரா சிங், சர்வதேச மல்யுத்த வீரர் கிங்காங் உட்பட பலர் நடித்தனர்.
கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கண்ணதாசன், மருதகாசி, குயிலன் பாடல்களை எழுதியிருந்தனர். ‘சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை’, ‘என்ன பேரு வைக்கலாம்’, ‘அம்புலி மாமா வருவாயே’ ஆகிய பாடல்கள் கவனிக்கப்பட்டன.
அசோசியேட் புரொடியூசர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் டி.இ.வாசுதேவன் தயாரித்தார். ரசிகர்களைக் கவர்வதற்காக இந்தப் படத்தில் மல்யுத்தப் போட்டி வைக்க முடிவு செய்யப்பட்டது.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய ‘பொன்னி’ படத்தில் தாரா சிங், கிங்காங் மோதும் மல்யுத்த காட்சி இடம்பெற்றது. அவர்களையே இதிலும் பயன்படுத்த நினைத்தார் இயக்குநர். படப்பிடிப்பாக இருந்தாலும் தாராசிங்கும் கிங்காங்கும் நிஜமாகவே மோதுவது வழக்கம். இதிலும் அப்படித்தான். ஒரு கட்டத்தில் தாராசிங் தாக்கியதில் கிங்காங் வாயில் ரத்தம் கொட்டியது. அதைக் கண்ட தயாரிப்பாளர் வாசுதேவன், கட் கட் என்று கத்திவிட்டு, இருவரையும் விலக்கியுள்ளார். அவர் யார் என்று தெரியாமல் கிங்காங், தயாரிப்பாளரை அடிக்கப் பாய, தாரா சிங் அவரை தடுத்து ‘அவர்தான் தயாரிப்பாளர்’ என்று கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தில் சண்டைக் காட்சியில் நடித்ததற்காக மட்டும் தாராசிங்குக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 15 ஆயிரம். அந்தக் காலகட்டத்தில் இது அடேங்கப்பா தொகை! அப்போது ஹீரோக்களை விட அஞ்சலி தேவி பிரபலமாக இருந்ததால் அவர் சம்பளம் ரூ.80 ஆயிரம். ஹீரோ நாகேஸ்வர ராவ் சம்பளம் வெறும் ரூ.15 ஆயிரம்தான்!
வாசுதேவன், தயாரித்த படங்களின் நெகட்டிவ்கள் வாகினி ஸ்டூடியோவில்தான் இருந்தன. ஒரு கட்டத்தில் அதை வாங்கிப் போகச் சொன்னது ஸ்டூடியோ. பராமரிக்க இடமின்றி தன் படங்கள் அனைத்தையும் எரித்திருக்கிறார் வாசுதேவன். அதில் ஒன்று ‘எங்கள் செல்வி’.
1960-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்தின் பிரின்ட் ஃபிலிமாக இல்லை. ஆனால் இணையத்தில் கிடைக்கிறது.