ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி; இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி!

0
47

பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி, உலக சாம்பியனான ஜெர்மனியுடன் இன்று மோதியது. இரவு 10.30க்கு தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.அரையிறுதிக்கே உரிய பரபரப்புடன் தொடங்கிய ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் முதல் கோலை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முனைப்புடன் ஆடிய ஜெர்மனி அணி இரண்டாவது காலிறுதியின் தொடக்கத்தில் 18வது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. ஹாஃப்டைமுக்கு சற்று முன்பாக க்றிஸ்டோபர் ரூர் அடித்த கோலின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலையில் இருந்தது.மூன்றாம் காலிறுதியில் சுக்ஜீத் சிங் அடித்த கோலால் இந்தியா 2-2 என்ற கணக்கில் ஜெர்மனிக்கு டஃப் கொடுத்து முன்னேறியது. 54வது நிமிடத்தில் மார்கோ மில்ட்காவ் மற்றொரு கோலை அடித்து ஜெர்மனியின் புள்ளிக் கணக்கை உயர்த்தினார்.

ஆறு நிமிடங்களே மீதமிருந்த நிலையில், கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி கடைசி வரை முனைப்புடன் போராடியது. எனினும் கடைசி பத்து நொடிகளில் ஷம்செர் அடித்த பந்து கோலை தாண்டிச் சென்றது. இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதனையடுத்து நாளை மாலை 5.30 மணிக்கு இந்தியா – ஸ்பெயின் இடையே வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடக்க இருக்கிறது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் தங்கப் பதக்கத்துக்காக மோதுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here