நித்திரவிளை சந்திப்பு வழியாக குமரி மேற்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் கழிவுநீர் தொட்டி அமைக்க அதன் உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு சாலையை சேதப்படுத்தி சுமார் 15 அடி ஆழத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் பணி நடந்ததால் பொதுமக்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. இரவு ரோந்து போலீசரும் கவனிக்கவில்லையாம்.
இந்த நிலையில் நேற்று (அக்.,15) காலை பார்த்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து நகராட்சி பொறியாளர் ஜெயந்தி மேற்பார்வையாளர் பிரம்ம சக்தி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் உள்ள பள்ளத்தை மூட வேண்டும் இல்லையெனில் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக கூறிய எச்சரிக்கை விட்டு சென்றனர்.
இதை அடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளம் தோண்டிய நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி கடையின் அடியில் கழுவுநீர் தொட்டி அமைப்பது என்றும் சேதப்படுத்திய சாலையும் உடனடியாக சீரமைப்பது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டது. ஆனால் நேற்று மாலை வரையிலும் சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.