கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஸ்டார் (47). அரசு பஸ் ஓட்டுநர். இவர் நேற்று மாலை 3 மணி அளவில் மார்த்தாண்டத்தில் இருந்து தடம் எண் 81 என்ற அரசு பஸ்சை இரயுமன்துறைக்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
விரிவிளை பகுதியில் செல்லும்போது பைக்கில் வந்த 3 பேர் பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது பஸ்சின் அடியில் விழுந்துள்ளனர். இதைப் பார்த்த பயணிகள் சத்தம் போடவே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பொதுமக்கள் பைக்குடன் விழுந்தவர்களை மீட்டனர். அப்போது 3 பேரும் அதிகமான மதுபோதையில் இருந்ததும், அவர்களுக்கு எந்தக் காயமும் இல்லை என தெரியவந்தது.
தொடர்ந்து மூன்று பேரும் பஸ்சின் முன்பக்கத்தில் சென்று டிரைவருடன் தகராறு செய்து பஸ்சின் முன்பக்கக் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். இதில் ஒருவருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஆவேசத்துடன் ஓடி வரவே போதை ஆசாமிகள் மூன்று பேரும் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுசம்பந்தமாக பஸ் டிரைவர் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.