மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: கேரள சுகாதாரத் துறை உத்தரவு

0
204

கேரளாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அந்தமாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல் ஆகியவை அதிகமாக பரவி வருகின்றன.

இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணாஜார்ஜ் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பருவகால காய்ச்சல் பரவலை தடுப்பது, நோயாளிகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பது தொடர்பாக செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது.

அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இனங்களுக்கு நோய் பாதிப்பு தென்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கேரளாவின் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படிசுகாதார ஊழியர்கள், நோயாளிகள், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு கேரள சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் முன்னியூரை சேர்ந்த5 வயது சிறுமி கடந்த மே மாதம்அமீபிக் மெனிங்கோஎன்செபா லிடிஸ் என்ற நோயால் உயிரிழந்தார்.

இது அரியவகை மூளை தொற்று நோய் ஆகும். அசுத்தமான குளத்தில் நீராடியதால் சிறுமிக்கு அமீபா நோய் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கேரளாவின் கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி இதே வகை அமீபா நோயால் உயிரிழந்தார். இந்தசூழலில் கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவனும் இதே அமீபா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். கோழிக்கோடு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.