மார்த்தாண்டம் அருகே உள்ள மூவாற்று முகம் பகுதி சேர்ந்தவர் மனோகரன் மகன் ஆதர்ஷ் (20). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் அந்த கல்லூரியில் விழா நடந்துள்ளது. விழாவின்போது சில மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆதர்ஷும் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆதர்ஷை அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஹைதர் (20) உட்பட நான்கு மாணவர்கள் சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் பைக் சாவியால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ஆதர்ஷ் மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆதர்ஷின் தாயார் ஸ்ரீகுமாரி (47) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.