குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து நாளை செவ்வாய்க்கிழமை எட்டாம் கொடை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 4:30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவமூர்த்திக்கு பஞ்சாமிருதாபிஷேகம், 7 மணி முதல் பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, மதியம் ஒரு மணிக்கு உச்சிகாலபூஜை, இரவு 8 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடக்கிறது. விழா முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்றும் கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வரும் 31ஆம் தேதி மீனபரணி கொடை விழா நடக்கிறது.