நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் கொடைவிழா நடந்து வருகிறது. விழாவை யொட்டி சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் பெண் போலீஸ் சங்கீதா (வயது 40) என்பவர் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வெள்ளமடத்தை சேர்ந்த வக்கீல் சுஜின் வேதா (27) உள்பட 7 பேர் வந்தனர். அவர்களிடம் பணியில் இருந்த பெண் போலீஸ் சங்கீதா, இந்த வழியாக செல்லும்பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் எனவே மாற்றுப்பாதையில் செல்லும்படி கூறினார். இதனால் சுஜின் வேதாவுக்கும், சங்கீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுஜின் வேதா உள்பட 7 பேர் சேர்ந்து சங்கீதாவை தகாத வார்த்தைகளால் பேசினர்.
இது குறித்த புகாரின்பேரில் சுஜின்வேதா உள்பட 7 பேர் மீது வடசேரி போலீசார், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.