கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம், லட்சார்ச்சனை, பஜனை பட்டாபிஷேகம், 2008 திருவிளக்கு பூஜை போன்றவை இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில் காலையில் திருப்பள்ளி எழுப்புதல், அபிஷேகம் கணபதி ஹோமம் , மிருதஞ்சய ஹோமம் , தேவஸ்தான தந்திரி சங்கரன் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனையும், இரண்டாம் நாள் நேற்று காலையில் கணபதி ஹோமம், கலச பூஜை, பொங்கல் வழிபாடு, வருஷாபிஷேகம், மதியம் அன்னதானம் , கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பஜனை குழுவின் பஜனை நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் பவனியும், அருள்மிகு கிருஷ்ணசுவாமி புஷ்ப வாகனத்தில் பவனியும், அபிஷேக உறியும், இரவு 2008 திருவிளக்கு பூஜை யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி தலைமையில் நடந்தது. நிகழ்வில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் குமரேசதாஸ், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் முருகன் , துணைத் தலைவர் சந்தோஷ் குமார், இணைச் செயலர் சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.