மண்டைக்காடு அருகே சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காராயன் மகன் பிரான்சிஸ் கொத்தனார். இவருக்கும் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த மேரி லீமா ரோஸ் என்பவருக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு பிரான்சிஸ் கூடுதலாக ரூ. 50,000 வரதட்சணை கேட்டு மேரி லீமா ரோசை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, இந்தப் புகாரைச் சம்பந்தமாக பிரான்சிஸ், அவரது தாயார் அமலபுஷ்பம், தம்பி சாந்தப்பன், தந்தை சிங்காராயன், சகோதரிகள் சகாயராணி, மிக்கேல் ராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியன் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி அமிர்தீன் தீர்ப்பு வழங்கினார். அதில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும், வரதட்சணை கேட்டு வாங்கியதற்கு 2 வருட சிறைத் தண்டனை ரூ. 5,000, வரதட்சணை திருப்பிக் கொடுக்காததற்கு 2 வருட சிறைத் தண்டனையும் ரூ. 5,000 என மொத்தம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறியுள்ளது.