வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேற்கு சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் (50). டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராதாகிருஷ்ணன் (38) என்பவர் கடைக்கு வந்தார். பின்னர் வேலப்பனிடம் சிகரெட் கேட்டார். சிகரெட்டிற்கு வேலப்பன் காசு கேட்டுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசி உருட்டு கட்டையால் வேலப்பனை தாக்கினார்.
இதை பார்த்த வேலப்பன் மகள் வினிஷா (21) சண்டையை தடுத்துள்ளார். வினிஷாவையும் உருட்டு கட்டையால் தாக்கி, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சி. நரேந்திரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.
அதில் வேலப்பனை தாக்கிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு ஒரு வருட சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும், வினிஷாவை உருட்டு கட்டையால் தாக்கிய குற்றத்திற்கு ஒரு வருட சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும், பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 3 வருட சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார். இதையடுத்து ராதாகிருஷ்ணனை போலீசார் சிறையில் அடைத்தனர்.