ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்தியகிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் சர்மா, அசாமை சேர்ந்த ரியான் பராக் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கக்கூடும். இவர்கள் இருவருமே ஐபிஎல் டி 20 தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சை வெளிப்படுத்தியிருந்தனர். டி 20 கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இருக்கும் இந்திய அணி அடுத்த உலகக் கோப்பை தொடரை 2026-ம் ஆண்டு சொந்த மண்ணில் விளையாட உள்ளது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி 34 சர்வதேச டி 20ஆட்டங்களில் பங்கேற்கிறது. இதனால் 2026-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கான அணியை தற்போதே கட்டமைக்கும் பணிகளை இந்திய அணி நிர்வாகம் மேற்கொள்ளக்கூடும். சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பதிலாக தொடக்க பேட்ஸ்மேனான தமிழகத்தின் சாய் சுதர்சன், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன் அபிஷேக் சர்மா அல்லது சாய் சுதர்சன் களமிறங்கக்கூடும். 3-வது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வாய்ப்பு உள்ளது. பேட்டிங் வரிசையில் 4 முதல் 6-வது இடத்தை ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜூரெல் ஆகியோர் நிரப்பக்கூடும். ஆல்ரவுண்டர் வரிசையில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறக்கூடும்.
சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் பிரதான வீரராக இருக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார்,துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித்ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். ஜிம்பாப்வே அணி சிகந்தர் ராஸா தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் சிகந்தர் ராஸவுடன் இன்னசென்ட் கையா, தடிவனஷே மருமணி, டியான் மையர்ஸ், மில்டன் ஷும்பா ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.