ஆம் ஆத்மி நாடாளுமன்ற கட்சி தலைவராக சஞ்சய் சிங் நியமனம்

0
97

நாடாளுமன்றத்தின் ஆம் ஆத்மி கட்சித் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் செயலாற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் சஞ்சய் சிங் மட்டுமே ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.

இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி நாடாளுமன்ற கட்சித் தலைவராக சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ல்நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்வான சஞ்சய்சிங்கின் பதவிக்காலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் மீண்டும் அவர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கட்சி நடவடிக்கைகளை சஞ்சய் சிங் ஒருங்கிணைப்பார். மேலும் மக்களவை, மாநிலங்களவைகளில் கட்சி எம்.பி.க்களின் செயல்பாடு, பேச வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் அவர் எம்.பி.க்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.