கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணுங்கள் என மாநிலங்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த பன்முக தளம் பிரகதி. இதன் 51-வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 9 மாநிலங்களை உள்ளடக்கிய ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலைத் துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான 7 முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பொதுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம், திட்டச் செலவை அதிகரிப்பதோடு, அத்தியாவசிய வசதிகள்மக்களுக்கு சரியான நேரத்தில் கிடைப்பதும் தடுக்கப்படுகிறது. எனவே, திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும். நகரங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது நிறுவனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மின் செலவை குறைக்க, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த நகர்ப்புறங்களில் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.
‘தூய்மை இந்தியா இயக்கம் 2.0′ திட்டம் மூலம் வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், வழக்கமான கண்காணிப்பு, பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்கள் தங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளை ஒத்துழைப்பு, சரியான நேரத்தில் வழங்கப்படும் அனுமதிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தீர்க்க வேண்டும்.
இதற்கு மத்தியப் பிரதேசத்தின் கென் ஆற்றில் வரும் கூடுதல் நீரை, உத்தரப்பிரதேசத்தின் பெட்வா நதியில் இணைக்கும் கென்-பெட்வா திட்டத்தை ஒரு முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும். நதிகள் இணைப்பு, நீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் திறமையான பாசனம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொண்டு, நீண்டகால நீர் பாதுகாப்பை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.















