இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் ஏசி வகுப்பு பயணிகளில் சிலர், தங்களுக்கு வழங்கப்படும் பெட்சீட் மற்றும் துண்டுகளைத் திருடிச் செல்லும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான பெட்சீட், போர்வைகள் மற்றும் துண்டுகள் திருடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் தினமும் இரவில் சுமார் 8 லட்சம் ஏசி வகுப்பு பயணிகள் பயணிக்கின்றனர். இவர்களது பயணச் சீட்டுக் கட்டணத்திலேயே இரண்டு பெட்சீட்டுகள், ஒரு போர்வை, ஒரு தலையணை, தலையணை உறை மற்றும் ஒரு முகத்தைத் துடைக்கும் துண்டு ஆகியவை அடங்கிய படுக்கை விரிப்பு சேவை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சேவையைப் பயன்படுத்தும் பயணிகளில், சராசரியாக 1,000 பயணிகளில் ஒருவர், தங்களுக்கு வழங்கப்படும் துணி வகைகளில் ஏதேனும் ஒன்றை திருடிச் செல்வது புலனாய்வு ஒன்றில் தெரியவந்தது.
ரயில்வேயில் மொத்தம் உள்ள 69 கோட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ மனுக்களில், 54 கோட்டங்கள் வழங்கிய தரவுகளின்படி, கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த சேவை முழுமையாகத் தொடங்கப்பட்ட 2022 ஜனவரி முதல் 2026 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1.27 கோடிக்கும் அதிகமான துணிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேலும், 2022ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2025-ல் இந்தத் திருட்டு சம்பவங்கள் 56% அதிகரித்துள்ளது. பயணிகளின் இந்த கைவரிசையால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் படுக்கை விரிப்பு ஒப்பந்ததாரர்களுக்குச் சுமார் ரூ.104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆர்டிஐ தரவுகள் கூறுகின்றன.
இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த விவகாரம் மிகவும் தீவிரமான கவலைக்குரிய ஒன்றாகும். துணி திருட்டைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இதில் ரயில்வே ஊழியர்கள் கூட்டுச்சதி செய்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி, பாலக்காடு… நேர்மை: இந்தியாவிலேயே மொத்தம் உள்ள 7 ரயில்வே மண்டலங்களைச் சேர்ந்த டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 முக்கிய கோட்டங்களில்தான் 67% திருட்டுகள் அரங்கேறுகின்றன. இந்திய ரயில்வே கோட்டங்களில் லட்சக்கணக்கில் துணிகள் திருடப்பட்டு வரும் வேளையில், தென்னிந்தியாவில் உள்ள கோட்டங்கள் இதில் மிக நேர்மையாகச் செயல்பட்டு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் திருச்சி மற்றும் பாலக்காடு ஆகிய இரு கோட்டங்களில் ஒரு துணி கூட திருடப்படவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.















