தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் முதன்முறையாக ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. இன்று (6-ம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தவகையில் 5 ஆயிரம் வீரர்கள்கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.
இந்த லீக் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை உட்பட 38 மாவட்டங்களிலும் 38 இடங்களில் மாவட்டஅளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் இருந்து 36 அணிகள் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு மண்டலத்திலும் 6 அணிகள் இடம் பெறும். மண்டல அளவிலான போட்டிகள் ஜூலை 20 மற்றும் 21-ம் தேதிகளில் சென்னை, வேலூா், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும்ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் அணி மற்றும் 6 மண்டல அணிகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட அணிகளை உருவாக்கி மாநிலஅளவிலான போட்டி நடத்தப்படும். இதில் 12 அணிகள் கலந்து கொள்ளும். மாநில அளவிலான போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இத்தகவலை தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவரும், ஹாக்கி இந்தியா பொருளாளருமான சேகர் மனோகரன் தெரிவித்தார்.