‘இந்தியா என் அடையாளம்’ – புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரியாக்‌ஷன்

0
31

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் பெருமை கொள்வதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியா என் அடையாளம். தேசத்துக்காக சேவை செய்வது என் வாழ்நாளின் பாக்கியமாக கருதுகிறேன். மீண்டும் அணியில் இணைந்ததை கவுரவமாக கருதுகிறேன். என்ன இந்த முறை எனக்கு வேறு பொறுப்பு. ஆனால், எப்போதும் போல எனது இலக்கு ஒன்று தான். அது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்வது.

இந்திய அணி வீரர்கள் 140 கோடி இந்திய மக்களின் கனவுகளை தங்களது தோள்களில் சுமக்கின்றனர். அதனை மெய்ப்பிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

42 வயதான கவுதம் கம்பீர் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். தொடர்ந்து 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இதன் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் அந்த பதவியில் இருந்து விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இணைந்தார். அவரது வழிகாட்டலில் இந்த சீசனில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர், பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தபடி மூன்றரை ஆண்டுகள் செயல்படுவார். அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு டிசம்பர் வரை இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.