ராகுலுக்கு எதிரான சர்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏ மீது வழக்கு

0
109

மக்களவை எதிர்க்கட்சி தலைவர்ராகுல் காந்தியை நாடாளுமன் றத்திலேயே கன்னத்தில் அறைய வேண்டும் என்று பேசிய கர்நாடக பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் உள்ள‌ மங்களூரு வடக்கு தொகுதி எம்எல்ஏ பரத் ஷெட்டி நேற்று முன்தினம் மாலை மங்களூருவில் நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “ராகுல் காந்தி குஜராத் மாநிலம் சென்றால் சிவபெருமானின் தீவிர பக்தரை போல நடிக்கிறார்.

அதே ராகுல் கேரளாவுக்கு சென்றால் மதச்சார்பற்ற நபராகவும், தமிழகத்தில் நாத்திகராகவும் மாறிவிடுவார். இந்துக்களும் இந்துத்துவாவும் வேறு வேறு என்று காங்கிரஸார் பேசுகிறார்கள். அவ்வாறு பேசுபவர்கள் எதிர்காலத்தில் பெரிய‌ ஆபத்தை விளைவிப்பார்கள்.

சிவாஜியும் மகாராணா பிரதாப்பும் தேவை ஏற்படும்போது ஆயுதங்களை எடுத்திருக்கிறார்கள். அவர்களை வணங்கும் நாமும் அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு ராகுல் காந்தியை கண்ணத்தில் அறைய வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் இனிமேல் இந்துகடவுள்களையும், இந்து மக்களையும் விமர்சித்து பேச மாட்டார். இல்லாவிடில் மங்களூருவுக்கு வரவழைத்து அவரை தாக்க வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏபரத் ஷெட்டி மீது 3 பிரிவுகளில் மங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல உடுப்பி, தட்சின கன்னடா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.