நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி இருந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.
அர்ஷ்தீப் வீசிய மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசினார் பட்லர். அடுத்த ஓவரில் அக்சர் படேலை பந்து வீச பணித்தார் ரோகித் சர்மா. அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த பட்லர், பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அதனை மிஸ் டைம் செய்தார். அது டாப் எட்ஜ் ஆக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் 5 ரன்கள் எடுத்த சால்ட்டை போல்ட் செய்தார் பும்ரா. பந்தை ஆஃப் கட்டராக வீசி இருந்தார். அது லெக் ஸ்டம்பை தகர்த்தது. ஆறாவது ஓவரின் முதல் பந்தில் ஜானி பேர்ஸ்டோவை போல்ட் செய்தார் அக்சர். பவர்பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
மீண்டும் எட்டாவது ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி விக்கெட்டை வீழ்த்தினார் அக்சர். பந்து எங்கு உள்ளது என அறியாமல் கிரீஸ் லைனை விட்டு வெளியில் வந்த மொயின் அலியை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார் ரிஷப் பந்த். 9-வது ஓவரின் முதல் பந்தில் சாம் கரனை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார் குல்தீப் யாதவ். 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து.
11-வது ஓவரில் ஹாரி ப்ரூக்கை அவுட் செய்தார் குல்தீப். அதற்கடுத்த ஓவரில் கிறிஸ் ஜார்டனை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் குல்தீப். அக்சர் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். லிவிங்ஸ்டன் மற்றும் ரஷித் ரன் அவுட் செய்யப்பட்டனர். ஆர்ச்சர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 29) அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது இந்தியா. அதோடு கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு தற்போது இந்தியா இந்த வெற்றியின் மூலம் பதிலடி தந்துள்ளது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அக்சர் படேல் வென்றார்.
கடைசியாக கடந்த 2014 டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது இந்தியா. 2007-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தப் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கோலி 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 4 ரன்களில் வெளியேறினார். 8 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுமார் 60 நிமிடங்களுக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித், 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ரஷித் சுழலில் போல்ட் ஆனார். 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். அவர் ஆரச்சர் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட் செய்தனர். ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசிய ஹர்திக், 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை 18-வது ஓவரின் நான்காவது பந்தில் ஜார்டன் வெளியேற்றினார். அடுத்த பந்தில் டக் அவுட் ஆனார் ஷிவம் துபே. அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் அக்சர் படேல். இதனால் கிறிஸ் ஜார்டன், ஹாட்ரிக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார்.
19-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது இந்தியா. ஆர்ச்சர் வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் ஜடேஜா. ஜார்டன் வீசிய கடைசி ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்தது.