தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில், ‘தனியார்மயம், ஒப்பந்தமுறை எதிர்ப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடந்த இக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: மருத்துவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள்கூட இன்றைக்கு ஒப்பந்த ஊழியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர். இப்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஒப்பந்த முறை படிப் படியாக இன்றைக்கு அரங்கேற்றப்படுகிறது.எல்லாவற்றையும் தனியாருக்கு ஒப்ப டைத்து விடுவது மற்றும் எல்லா ஊழியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஆகியவற்றை தொழிலாளி வர்க்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.கடந்த அதிமுக அரசு தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கையைக் கடைபிடித்ததால் வெளியேற்றப்பட்டது. அதில் இருந்து இந்த அரசு படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
இக்கருத்தரங்கில் மதிமுக பொருளாளர் மு.செந்தில் அதிபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.