திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பி மக்கள் வாக்களிக்கவில்லை.
அந்த தேர்தலில் மொத்தம் 4.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. எனவே, வரலாறு காணாத தோல்வியை திமுக தழுவும்.
திமுக அளித்த வாக்குறுதிகளில் 15 சதவீதம் மட்டுமே நிறை வேற்றப்பட்டுள்ளது. வடிவேலு நடித்த 23-ம் புலிகேசி திரைப்படத்தில் நடப்பதை போலவே, தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கையாளும் தன்மையை முதல்வர் ஸ்டாலின் இழந்து விட்டார். இந்த ஒரு காரணத்துக்காகவே ஆட்சி மாற்றம் வேண்டும். காவல்துறைக்கு சுதந்திரம் அளித்து, தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றால் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.














