கணியூர், பெருமாநல்லூரில் விஜய் பிரச்சாரத்தில் வேட்பாளர் உட்பட 20 பேர் மயக்கம்

0
40

தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில் கோவை வந்தார். அவரை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விஜய் வருகையையொட்டி, கோவை அவிநாசி சாலையில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. கட்சியினர் மற்றும் ரசிகர்களை விமான நிலையம் பகுதியில் போலீஸார் அனுமதிக்கவில்லை. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் விமான நிலையத்துக்குள் விஜய் வரும்போது கூட்டம் குறைவாக இருந்தது. அவிநாசி சாலையில் ஆங்காங்கே தொண்டர்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

சூலூர் தவெக வேட்பாளர் சுகுமார், கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தண்ணீர் தேசம்’ புத்தகத்தை விஜய்யிடம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, கணியூர் சுங்கச்சாவடி அருகே கட்சியினர் சார்பில் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, நூல் கண்டு மாலையை விஜய்க்கு அணிவித்த வேட்பாளர் சுகுமார் திடீரென மயக்கம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவருடைய முகத்தில் நீர் தெளித்ததையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, “தொடர்ந்து சாப்பிடாமல் பிரச்சாரத்தில் இருந்ததால், உடல் சோர்வு ஏற்பட்டு மயக்கமடைந்தேன். தற்போது லேசான உணவு எடுத்துக்கொண்டு, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டேன்” என்றார்.

தொடர்ந்து, பிரச்சார வாகனம் மூலமாக ஆட்டையாம்பாளையம் பிரிவுக்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் விஜய் வந்தடைந்தார். அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரையில் ரோட்ஷோவில் பங்கேற்றார். அப்போது ரசிகர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தபடி வந்தார்.

முன்னதாக பெருமாநல்லூர் பிரச்சாரத்தை முடித்து விட்டு பூலுவபட்டி வரையில் ரோட்ஷோ நடத்தவும் அக்கட்சியினர் திட்டமிட்டிருந்த நிலையில் காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் அவரைக் காண்பதற்காக பிற்பகலில் இருந்து வழிநெடுகிலும் காத்திருந்த பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

பெருமாநல்லூரில் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காக பிற்பகல் 12 மணி முதலே குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் திரண்டதால் சிலருக்கு சோர்வு ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸார் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவர்களுக்கு குடிநீர் வழங்கினர்.

எனினும், நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்தது, கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களை பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here