இந்து மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தின. அப்போது எழுந்த சர்ச்சைபேச்சுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட கட்சிகள் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவதாகக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அர்ஜுன் சம்பத் பேசும்போது, ‘மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்துகிறார்கள். இது தண்டிக்கப்பட வேண்டும்,’ என்றார். தொடர்ந்து, நடிகை கஸ்தூரி பேசும்போது, பிராமணர்களை திரைப்படங்களில் மது அருந்துவது போன்று சித்தரித்து இழிவுபடுத்துகிறார்கள் என்றும், திருமணம், கிரஹபிரவேசம், இறுதிச் சடங்கு என பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் அங்கம் வகிக்கும் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவது தவறு. வெளியே இருந்து வந்தவர்கள் இன்று தங்களை தமிழர்கள் என கூறும்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு இருக்கும் பிராமணர்களை தமிழர்கள் இல்லை என அவர்கள் எப்படி கூறலாம் என்றார்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திமுடிந்த ஒரு சில மணி நேரத்திலேயே, திராவிடர் கழகம் சார்பில் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பேசும்போது, ‘இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடியின பெண் என பெருமை பேசுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றம் திறக்கப்படுவதற்கு, சிவாச்சாரியார்களை எல்லாம் அழைத்த அவர்கள், குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை’ என்றார்.
இதைதொடர்ந்து, திக நிர்வாகி மதிவதனி பேசும்போது, ‘அனைத்து அரசு உயர் பதவிகளிலும் பிராமணர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், விவசாயம் செய்ய கூடிய பிராமணர்கள் இந்த மண்ணில் இல்லை. சொகுசு வாழ்க்கையைதான் பிராமணர்கள் வாழ்கிறார்கள்’ என்றார்.
இந்து மக்கள் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் அடுத்தடுத்துஒரே இடத்தில், ஒருவருக்குக்கொருவர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை கஸ்தூரி அவதூறு கருத்து? – இந்நிலையில், தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சொன்ன சில கருத்துகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அந்தவகையில், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘தமிழர், தெலுங்கர் என அனைவரும் அண்ணன், தம்பியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தெலுங்கு பேசும் மக்களை பற்றி நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள கஸ்தூரி, ‘தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. நான் ஒரு பிராமணர் என்பதால்தான் இப்படியான பொய்களைக் கூறுகிறார்கள்’ என்றார்.