குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது.
7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, அசம்புரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
காலை முதலே மழை பெய்து வந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதற்கு சுணக்கம் காட்டினார்கள்.பெற்றோர் அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு வந்தனர். குடை பிடித்தவாறு வந்தாலும் ஒரு சில மாணவிகள் மழையின் வேகத்தினால் நனைந்தனர். சீருடைகள் நனைந்ததால் மாணவிகள் அவதிப்பட்டனர்.
பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இடலாக்குடி பகுதியில் சாலையில் உள்ள பள்ளம் எங்கு கிடக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.
சுசீந்திரம், கன்னியாகுமரி, கொட்டாரம், அஞ்சுகிராமம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குருந்தன்கோடு, சுருளோடு, மயிலாடி, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை கொட்டியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கோழிப்போர் விளை பகுதியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மட்டுமின்றி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும்,பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 40.76 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கன்னிமார் 17.2, கொட்டாரம் 27.8, மயிலாடி 15.2, நாகர்கோவில் 32.4, ஆரல்வாய்மொழி 13, பூதப்பாண்டி 25.2, பாலமோர் 34.4, தக்கலை 49.6, குளச்சல் 40, இரணியல் 14.4, அடையாமடை 23, குருந்தன்கோடு 28.2, கோழிப்போர்விளை 62.2, மாம்பாழத்துறையாறு 29, சிற்றாறு 1-10.2, சிற்றாறு 2-28.4, களியல் 14.2, பேச்சிப்பாறை 32.8,பெருஞ்சாணி 44.6, புத்தன் அணை 39.8, சுருளகோடு 31.2, ஆணைக்கிடங்கு 28.4, திற்பரப்பு 13, முள்ளங்கினாவிளை 43.8.