டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் கடற்படை கேப்டன் மிருதுல் ஷா (53). இவருடைய பெற்றோர் ஒரு வீட்டை 1966-ம் ஆண்டு விமானப்படை கேப்டன் ஹர்பால் சிங் என்பவர் ரு.100-க்கு வாடகைக்கு விட்டுள்ளனர். ஹர்பால் சிங் உயிரிழந்த பிறகு அவரது மனைவி மற்றும் மகள்(நீலம் சிங்) அங்கு தொடர்ந்து வசித்து வந்துள்ளனர்.
தாய் உயிரிழந்த பிறகு நீலம் சிங் வாடகைதாரராகி உள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து வெறும்100 ரூபாயை மட்டுமே வாடகை செலுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, பெற்றோரின் வீடு மிருதுல் ஷாவுக்கு சொந்தமாகி விட்டது. தனக்கு தேவைப்படுவதால் வீட்டை காலி செய்யுமாறு நீலம் சிங்கிடம் கடந்த 2016-ம்ஆண்டு மிருதுல் ஷா தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மிருதுல் ஷா உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதை விசாரித்த நீதிமன்றம் ஷாவின் வீட்டை ஒப்படைக்குமாறு 2017-ல் தீர்ப்பு வழங்கியது. இந்ததீர்ப்பை எதிர்த்து நீலம் சிங்நைனிடால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையின்போது மிருதுல் ஷா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மிருதுல் ஷா அடிக்கடி பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். எனவே, அவருடைய குடும்பத்தினரை சொந்த வீட்டில் தங்க வைக்க விரும்புவதால் அந்தவீட்டில் குடியிருக்கும் வாடகைதாரரை காலி செய்ய உத்தரவிட வேண்டும்” என வாதாடினார்.
இதைக்கேட்ட நீதிபதி சுபிர் குமார், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். மேலும், நீலம் சிங் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு அவர் காலிசெய்யாவிட்டால் அவரை அப்புறப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் 58 ஆண்டுகளுக்குப் பிறகு நீலம் சிங் அந்த வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.