கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: கனடாவை வீழ்த்தி உருகுவே 3-வது இடம்

0
185

கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடரின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடா அணியை உருகுவே வீழ்த்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் உருகுவே 4-3 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

புகழ்பெற்ற கோபா அமெரிக் காகால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி கண்ட கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நேற்று நார்த் கரோலினாவிலுள்ள சார்லோட் மைதானத்தில் மோதின.

3-வது இடத்துக்கான ஆட்டமாக இருந்தாலும் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. போட்டி தொடங்கிய 8-வது நிமிடத்திலேயே உருகுவே தனது முதல் கோலை அடித்தது. இந்த கோலை அந்த அணி வீரர் ரோட்ரிகோ பென்டான்கர் அடித்தார். இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத் தொடர்ந்து உருகுவே அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். கனடா வீரர்கள் பலமுறை கோல் கம்பம் அருகே பந்தை கடத்திக் கொண்டு வந்தபோதிலும் கோலடிக்க முடியவில்லை.

ஆனால் 22-வது நிமிடத்தில் கனடா வீரர் இஸ்மாயில் கோன் கோலடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது. முதல் பாதி வரை இந்த நிலைதான் நீடித்தது.

2வது பாதி தொடங்கியதும் கனடா வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடி, உருகுவே வீரர்களுக்கு சவால் அளித்தனர். ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் கனடா அணி ஒரு கோலடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர் ஜோனதான் டேவிட் இந்த கோலை அடித்தார்.

இதனால் கனடா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் கோலடித்து 2-2 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தினார்.

ஆட்ட நேரம் முடிவடைந்து, காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரமும் முடிவடைந்தது. ஆனால் எந்த அணியும்கோலடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அரை மணி நேரம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்களால் வெற்றிக்கான கோலை அடிக்க முடியாமல் போனது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

இதில் 4-3 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது. இதன் காரணமாக நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.