புற்றுநோயால் அவதிப்படும் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ ரூ.1 கோடி உதவி

0
120

புற்றுநோயால் அவதிப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது.

அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரிட்டனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்க தேவையான உதவியை பிசிசிஐ வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் சந்திப் பாட்டீல் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அன்ஷுமன் கெய்க்வாட் சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக ரூ.1 கோடி நிதியுதவியை பிசிசிஐ வழங்கியுள்ளது. இதுதொடர்பான உத்தரவை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாக கவுன்சில்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு சிகிச்சை வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை வழங்குமாறு பிசிசிஐ நிர்வாகக் குழுவுக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து அந்தத் தொகை அவருக்கு உடனடியாக அனுப்பப்படுகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, கெய்க்வாட் குடும்பத்தாருடன் பேசியுள்ளார். மேலும் இந்த இக்கட்டான சூழலில் கெய்க்வாட் குடும்பத்தாருக்கு உதவியாக பிசிசிஐ இருக்கும் என்றும், கெய்க்வாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ செய்யும் என்றும் ஜெய் ஷா உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அன்ஷுமன் கெய்க்வாட்புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு நிதியுதவி தேவைப்படுவதாகவும் சந்தீப்பாட்டீலிடம், கெய்க்வாட்டின் மகன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்தக் கோரிக்கையை பிசிசிஐ கவனத்துக்கு சந்தீப் பாட்டீல், கபில்தேவ், முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்தே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்காக முன்னாள் வீரர்கள் மொஹிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்க்கார் ஆகியோரிடமிருந்து நிதியை திரட்டி வருவதாக கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

71 வயதாகும் கெய்க்வாட் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 2 சதம், 10 அரை சதம் உட்பட 1,985 ரன்களைக் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் 269 ரன்களைச் சேர்த்துள்ளார்.

1997 முதல் 2000-ம்ஆண்டு வரை அவர் இந்தியகிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.