குமரி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்தி்ப்பில் உள்ள பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாறைபொடி, ஜல்லி கற்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வேண்டும், கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்திற்கு சங்க தலைவர் சரவண சுப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் சகாய ஜார்ஜ் ரூபஸ், பொருளாளர் காசிநாதன், இணை செயலாளர் அகஸ்டின் இனிகோ, முன்னாள் தலைவர் தட்சிணாமூர்த்தி, செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் நெல்சன் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தமும் செய்திருந்தனர்.