சீனாவும், அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல், கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்றடைந்தபோது வெளியிட்ட எழுத்துப்பூர்வ உரையில், சீன மக்கள் சார்பில் அமெரிக்க மக்களுக்கு நல்வாழ்த்துகளை ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
ஜி ஜின்பிங் தனது உரையில் குறிப்பிட்டுள்ளதாவது: சீனாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய நாடுகள். இரு நாடுகளின் மக்களும் சிறப்பானவர்கள். இரு நாட்டு மக்களுக்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு இருந்து வருகிறது. இரு நாடுகளின் நலன்களும் ஆழமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.
சீனாவும், அமெரிக்காவும் போட்டியாளர்களாக அல்ல, கூட்டாளிகளாக இருக்க வேண்டும். சீன தேசத்தின் மறுமலர்ச்சியும், அமெரிக்காவை மீண்டும் வலி மையான நாடாக உருவாக்கும் முயற்சியும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் வெற்றி பெற உதவுவதுடன், உலக மக்களின் நலனையும் மேம்படுத்த முடியும்.
கடந்த மே மாதம் அதிபர் ட்ரம்ப் சீனா வந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட உறவை உருவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இது இருதரப்பு உறவின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டுதலை வழங்கி உள்ளது.
சீனாவும், அமெரிக்காவும் ஒரே திசையில் செயல்பட்டு, ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையான உறவை உருவாக்க வேண்டும். கட்டுப்படுத்தக் கூடிய போட்டி, நிர்வகிக்கக் கூடிய வேறுபாடுகள் மற்றும் அமைதிக்கான உறுதிப்பாடுகள் இடம்பெற வேண்டும்.
புதிய சகாப்தத்தில் சீனாவும், அமெரிக்காவும் இணைந்து வாழ்வதற்கான சரியான வழியைக் கண்டறிய வேண்டும். உலகம் வளர்ந்து வருகிறது. காலமும் மாறி வருகிறது. ஆனால், இரு நாடுகளும் அமைதியாக இணைந்து வாழ வேண்டும் என்ற வரலாற்று அடிப்படை மாறவில்லை. இந்தப் பயணம் இரு நாட்டு மக்களின் நலனை மேம்படுத்தி, உலக அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஜி ஜின்பிங் வாஷிங்டனுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் வர்த்தக வரிகள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ராணுவ உறவுகள், மேற்கு ஆசிய மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் போர், விண்வெளி ஆயுதப் போட்டி மற்றும் தைவானுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.














